: சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல்

Posted: February 24, 2012 in Uncategorized
Tags:

திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மண்டல குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1,256 ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு இன்று (24ம் தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் ஆரம்பமானது. இத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டுப்பதிவுக்காக 242 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் அனைத்து ஓட்டுச் சாவடிகளும் பதட்ட சாவடிகள் என அறிவிக்கப்பட்டதால் அனைத்திலும் வீடியோ மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இடைத் தேர்தலை அமைதியாகவும், முறையாகவும் நடத்தும் வகையில் தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. தொகுதி முழுவதிலும் கண்காணிக்க 10 ஓட்டுச் சாவடிகளுக்கு ஒரு மண்டல குழுக்கள் அமைக்கப்படுகிறது.
இதன்படி மொத்தம் 24 மண்டல குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து குழுக்களுக்கும் வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளன. துணை தாசில்தார் அந்தஸ்து தலைமையில் செயல்படும் இக்குழுவில் ஒரு உதவியாளர் மற்றும் அலுவலர் பணியில் ஈடுபடுவர். தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது உட்பட பல்வேறு பிரச்னைகளை கண்காணித்து அதனை தடுக்கவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் 24 மண்டல குழு அதிகாரிகளுக்கும் மற்றும் நடமாடும் போலீஸ் குழுவினருக்கும் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதில் சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சிகள் உரிய முறையில் பின்பற்றுகின்றனவா என்பது குறித்தும், அமைதியான, நேர்மையான தேர்தலுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில் கலெக்டர் செல்வராஜ், டி.ஆர்.ஓ உமா மகேஸ்வரி, சிரஸ்தார் கண.முருகானந்தம், தேர்தல் பிரிவு தாசில்தார் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலர்களுக்கு பயிற்சி: >இதற்கிடையில் சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் பணியில் ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும் ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உட்பட மொத்தம் 1,256 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இன்று (24ம் தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லை கோட்டத்தில் பாளை சேவியர் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், சேரன்மகாதேவி கோட்டத்தில் ஸ்காட் பாலிடெக்னிக்கில் மாவட்ட ஆதிதிராவிட அலுவலர் ஐதர் அலி, தென்காசி கோட்டத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தென்காசி ஆர்.டி.ஓ காங்கேயம் கென்னடி தலைமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் விதம், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஓட்டுப்பதிவின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

Leave a comment